15 ஜூலை 2008

பொட்டல் காட்டில் பிரசவம்!!!!!


குழந்தை அலறுவது கோவிலுக்குகேட்கலையோ... மைந்தன் கதறுவதுமாளிகைக்குக் கேட்கலையோ...ஏழைக் குழந்தையம்மா........எடுப்போர்க்கு பாலனம்மா உன்சமயபுரத்தவிட்டு சடுதியில வாருமம்மா...........

(மாரியம்மன் தாலாட்டு)

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் ஒக்கூர் ராம்ஜி நகரில் உள்ள 69 குடும்பங்களில் உள்ள அனைவரும் பொய்யாலம்மன் என்ற அம்மனுக்கு அடிமைப்பட்டவர்களாம்.?


மூன்று மணி நேரமானாலும், மூன்று நாட்களானாலும் அந்தப் பொட்டலிலேயே அப்பெண் பிரசவ வலியுடன் இருந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். பிரசவ வலி வந்த பெண் நின்றுகொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ பிரசவிக்கக் கூடாது. மண்டியிட்ட நிலையில்தான் பிள்ளை பெற வேண்டும். தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டும். பின் நஞ்சுக்கொடியை அவர்களே அறுத்துக்கொண்டு குழந்தையை குளிப்பாட்டி, யார் கண்ணிலும் பட்டுவிடாமல் தனியாக இருக்க வேண்டும்.


முதல் பிரசவமானால் பதினைந்து நாட்களும், அடுத்தடுத்த பிரசவங்களுக்கு ஏழு நாட்களும் இப்படித் தனியாக இருக்க வேண்டும். புதிய நாலைந்து மட்டைகள் வைத்துக் கட்டப்பட்ட ஒரு படலுக்குள் விளக்கேற்றிக் கொள்ளாமல் இரவோ, பகலோ, வெள்ளமோ அப்படியே இருக்க வேண்டும். ஒரு மாதம்வரை அவர்களுக்கு அயல் மருந்துகள் ஏதும் கொடுக்கப்படக்கூடாது.

அங்கு பெண் கர்ப்பிணியானவுடன் அம்மனை நினைத்து வழிபட்டு வருகிறார்கள். இந்த கர்ப்ப காலங்களில் கலர் உடைகள், வளையல் மற்ற ஆபரணங்கள் எதையும் அந்தப் பெண்கள் அணிவதில்லை. இந்த வழிபாட்டில் ஏதும் தவறு செய்துவிட்டால் பிரசவம் சிக்கலாக இருக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

இந்த முறைப்படியே பல பெண்கள் குழந்தை பெற்று வருகிறார்கள். அப்பெண்களிடையே பேசினோம்.


அப்பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி பொட்டல் பிரசவம் வந்த வரலாற்றைக் கூறினார். பிறகு பிரசவத்தில் தாங்கள் அனுபவித்த துன்பங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.மூன்று குழந்தைகள் பெற்ற மாரியம்மாள் தனக்கு இரண்டு இரவுகள் ஒரு பகல்வரை நஞ்சுக்கொடி வராமல் சிரமப்பட்டதாகத் தெரிவித்தார். உடனே தனது தப்பு ஏதும் இருந்தால் மன்னிக்கும்படி அம்மனுக்கு வேண்டிக் கொண்டு ரூ.101 காணிக்கை வைத்ததும் உடனே நஞ்சு வந்துவிட்டதாக சிலிர்ப்புடன் கூறினார்.


முத்து என்ற பெண் தான் தன்னுடைய நாலு குழந்தைகளையும் பொட்டலிலேயே சுகப்பிரசவமாக பெற்றுக் கொண்டதைத் தெரிவித்தார். அதேநேரம் அவரது உறவுப் பெண்களான அமிர்தவள்ளி, புஷ்பம் ஆகியோருக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டுக் குழந்தைகள் இறந்துவிட்டதையும் தெரிவித்தார்.பிச்சையம்மாள் என்ற பாட்டி (நாலு குழந்தைகள் பெற்றவர்) இக்காலத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களை இப்பெண்கள் பின்பற்றாததால்தான் இந்நிலை வந்ததாக வருத்தப்பட்டார். அவர் குழந்தை பெற்றுக் கொள்ளும் காலத்தில் எல்லாம் தாயும் சேயும் ஒரு மாதத்திற்கு விளக்கு முகமே பார்க்கக்கூடாதாம்.


இவர்கள் தப்பு என்றும் தவறு என்றும் கூறுவது மஞ்சள் பூசி குளித்தல், கலர் ஆடைகள் அணிதல் போன்றவற்றையே.


பிரசவத்தில் சிக்கல் வரும்போது பூசாரியை அழைத்து செய்த தவறு என்ன என்று குறி கேட்பார்களாம். அப்பொழுது அப்பூசாரி அப்பெண் செய்த தவறைக் கூறி அபராதம் போடுவார். அபராதம் கட்டியவுடன் சுகமாகி விடுவார்களாம்.


இக்கலந்துரையாடலின் போது தெரிந்து கொண்டது, முதிய தலைமுறையினர் பொட்டல் பிரசவத்தில் அதிக நம்பிக்கையும் இளைய தலைமுறை பெண்கள் புதுமையை வரவேற்கவும் நவீன மருத்துவத்தில் நாட்டம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான். அதற்கு கிராமத்து முதிய தலைமுறையினர் விடுவதில்லை என்பது அவர்களது குமுறல்.வீரம்மாள் என்ற பெண்மணி முத்தாய்ப்பாய் ஒரு கருத்து சொன்னார்.


""என்னங்க பண்றது? பிரசவங்கிறது எங்களை மாதிரி ஏழப்பட்டவங்களுக்கு இப்படி நடந்தாத்தான்.... வயித்த வலிச்சு ஆஸ்பத்திரி போகணுன்னா அறந்தாங்கிக்கும், அத விட்டா புதுக்கோட்டைக்கும் போகணும்.... ப்ளசர் காருக்கே ஆயிரம் ரூபாயாவது வேணும்... அப்புறமும் சுகப்பிரசவம்தாங்கிறது நம்பிக்கையில்லே... வயித்தக் கிழிச்சு எடுப்பாக.... கொறஞ்சது பத்தாயிரமாவது வேணும்.... எங்கேருக்கு காசு? அதான் வாழ்வோ சாவோ அந்த அம்மனோடவே போகட்டுமுன்னு இருக்கோம்.... இது கொஞ்சம் கவுரதையா இருக்கு....'' என்றார்.


நிலைமை இப்படி இருந்தாலும் புதுகை பூவையர் மன்றம் மற்றும் சில மகளிர் அமைப்புகளின் தலையீட்டில் பொட்டல் பிரசவத்தில் சில மாற்றங்கள் வந்துள்ளன.முதலாவதாக அவர்கள் நம்பிக்கைக்குப் பங்கம் வராமல் பிரசவிக்கும் பெண்களே முதலுதவி செய்து கொள்ள வசதியாக மருந்துகள் அடங்கிய பெட்டி ஒன்று கொடுப்பது, பிரசவிக்கப் போகும் பெண்ணுக்கு சில பயிற்சிகள் கொடுப்பது.


இரண்டாவது, அங்குள்ள இளைய தலைமுறைப் பெண்கள் நவீன மருத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால் அவர்களையெல்லாம் இணைத்து கருத்தரங்கம் ஏற்பாடு செய்வது, அதில் பெண் மருத்துவரும், கருத்தாளர்களும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குவது.


மூன்று மாதங்களுக்கொரு முறையேனும் அங்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சிகள் கொடுத்தல் மூலம் நாளடைவில் மாற்றம் வரும் என்றும் தொடர்ந்து இதற்கான இயக்கங்கள் நடத்துவது அவசியம் என்றும் புதுகை பூவையர் மன்ற அமைப்பாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், இன்றைய கணினி யுகத்திலும் பொட்டல் காட்டில் பெண்களின் பிரசவம் நடந்து கொண்டிருப்பது நம் முகத்தில் அறையும் நிஜம்.

6 கருத்துகள்:

புதுகை.அப்துல்லா சொன்னது…

அடப்பாவமே! இந்த அரசாங்கமெல்லாம் என்ன பண்ணுதுன்னு ஒன்னும் புரியலையே?

மணியன் சொன்னது…

//..இன்றைய கணினி யுகத்திலும் பொட்டல் காட்டில் பெண்களின் பிரசவம் நடந்து கொண்டிருப்பது நம் முகத்தில் அறையும் நிஜம்.//

:(((

புதுகைச் சாரல் சொன்னது…

நன்றி.அப்துல்லா


நன்றி மணியன்

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

//""என்னங்க பண்றது? பிரசவங்கிறது எங்களை மாதிரி ஏழப்பட்டவங்களுக்கு இப்படி நடந்தாத்தான்.... வயித்த வலிச்சு ஆஸ்பத்திரி போகணுன்னா அறந்தாங்கிக்கும், அத விட்டா புதுக்கோட்டைக்கும் போகணும்.... ப்ளசர் காருக்கே ஆயிரம் ரூபாயாவது வேணும்... அப்புறமும் சுகப்பிரசவம்தாங்கிறது நம்பிக்கையில்லே... வயித்தக் கிழிச்சு எடுப்பாக.... கொறஞ்சது பத்தாயிரமாவது வேணும்.... எங்கேருக்கு காசு? அதான் வாழ்வோ சாவோ அந்த அம்மனோடவே போகட்டுமுன்னு இருக்கோம்.... இது கொஞ்சம் கவுரதையா இருக்கு....'' என்றார். //

அரசு கவனத்தில் கொண்டால் என்ன ?

புதுகைச் சாரல் சொன்னது…

வாங்க ரிஷான் ஷெரீப்

//அரசு கவனத்தில் கொண்டால் என்ன ?///
அரசு ''கல்லு'' மாதிரி இருக்கிறது !!

இளமயில் சொன்னது…

அரச நம்பி பிரயோஜனம் இல்லைங்க..
மக்களே உணர்ந்தால் தான் உண்டு .....
காலத்திற்கு ஏற்றார் போல் மாற வேண்டும் ..

i am also started one blog..if u have time please visit tht too
illamayizh.blogspot.com